சங்ககிரி அருகே புதியதாக அமைக்கப்படவுள்ள 4 வழிச்சலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி 15 நாட்களாக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குழந்தைகள் அதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தம் 214 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் அருந்ததியர், ஆதிதிராவிடர் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த 5-ம் தேதியிலிருந்து பள்ளிக்கு செல்லாமல் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அப்பகுதியில் ஓமலூர் முதல் சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதி பொதுமக்களும் பள்ளி மாணவ,மாணவிகளும் அவ்வழியாக பள்ளிக்கு செல்வதற்கு தரைப்பாலம் அமைத்து தர கோரி தொடர்ந்து 15 வது நாளாக பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும், தற்போது தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சத்தில். இருந்து வருகிறோம் என்றும், இது குறித்து உயர் அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

p.செல்வராஜ் செய்தியாளர், இளம்பிள்ளை.