சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை விற்பனைக்காக அடுப்பு மூலம் தயாரிக்கும் பொரி உற்பத்தி தீவிரம்:

கடந்த ஆண்டை விட விலை உயர்வு

வருகின்ற 4 ந்தேதி ஆயுத பூஜையும், 5ம் தேதி சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்பட உள்ளது.

இந்த பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பொரி உற்பத்தி நிலையங்களில் அடுப்பு பொரிக்கான ஆர்டர் குவியத் தொடங்கி உள்ளது.

இதில், தர்மபுரி, காரிமங்கலம், கிருஷ்ணகிரியில் அதிக அளவில் மெஷின் மூலமே பொரி தயாரிக்கப்படுகிறது.

ஆனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை, ஓமலூர் ஆகிய இடங்களில் அடுப்பு மூலம் பழையான முறையில் பொரி இப்போதும் தயாரிக்கப்படுகிறது.

இப்படி தயாரிக்கும் பொரிக்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் பொரி தயாரிப்புக்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து 64 குவிண்டால் அரிசி நெல்லை வரவழைத்து அதை மிதமான முறையில், வேக வைத்து உப்பு நீர் தெளித்து பக்குவமடைந்த பின்பு 7 நாட்கள் கழித்து பொரியை தயார் செய்கின்றனர்.

ஆனால் தற்போது பொதுமக்கள் மத்தியில் மெஷின் பொரிக்கு வரவேற்பு குறைந்து, அடுப்பு மூலம் தயாரிக்கப்படும் பொரியை விரும்பி சாப்பிடுகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் அடுப்பு மூலம் தயாரிக்கப்படும் பொரியை விரும்பி கேட்பதால் வியாபாரிகள் அடுப்பு பொரிக்கு அதிக அளவில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அரிசி நெல்லின் விலை 75 கிலோ மூட்டை 1700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதனால் பொரி விலை சற்று உயர்ந்து உள்ளது.

கடந்தாண்டு பொரி மூட்டை ரூபாய் 500க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொரி மூட்டை ரூபாய் 800 விற்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் பொரி விலை அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து ஓமலூர் பொரி மண்டி உரிமையாளர் மலர் கூறியதாவது,

கடந்த  இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பொறி அதிகளவு வியாபாரமாக இல்லை .ஆனால் இந்த ஆண்டு விற்பனை அதிகரித்து உள்ளது .

பொரி அரிசி விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஒரு மூட்டை பொறி ரூபாய் 500க்கு விற்றோம். இந்த ஆண்டு ரூபாய் 700 முதல் 800 வரை விற்கிறோம்.

மிஷின் தயாராகும் பொறிக்கும் கையில் தயார் செய்யப்படும் இந்த பொரிக்கும் ருசி வித்தியாசம் இருக்கும்.
நாங்கள் தயாரிக்கும் இந்த பொரியை அதிக நாள் வைத்து சாப்பிடலாம், மிஷினில் தயாரிக்கப்படும் பொரி அதிக நாட்கள் வராது.

இவ்வாறு பொரி மண்டி உரிமையாளர் மலர் தெரிவித்தார்.

 

சேலம் குமரகிரி ஏரி ரூபாய் 25 கோடியில் புனரமைக்கும் பணி தீவிரம்.

மழை வெள்ளம் வந்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க உபரிநீர் கால்வாய் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது அம்மாபேட்டை.இங்கு மிக பழமையான குமரகிரி ஏரி உள்ளது.

மிகவும் மோசம் அடைந்திருந்த இந்த ஏரி புனரமைக்க சேலம் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்து இதற்கு ரூபாய் 10 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கியது.

ஏரியில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டால் அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளம் நீர் புகுந்து விடாமல் இருக்க உபரி நீர் கால்வாய் திட்டமும் ரூபாய் 15 கோடியே 11 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பணிகளும் நடக்கிறது.

இந்த நிதியில் தற்போது குமரகிரி ஏரி முழுவதும் பொக்லின் எந்திரம் கொண்டு ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு வருகிறது.

இது தவிர ஏரியில் இருந்த கழிவு பொருட்கள் மற்றும் பாறைகள் கற்களும் அகற்றப்பட்டு வருகிறது.

ஏரி புனரமைக்கும் பணி வேகமாகப்படுத்தப்பட்டு ஏரி விரைவில் திறக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது..

ஏரி புனரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் ஏரி பகுதி முழுவதும் முள்வேலி அமைத்து சுற்றுலா தளமாக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது என சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாம்பு தொல்லையால் அவதிப்படுகிறோம்.சேலம் மேயரிடம் பெண்கள் புகார்.

மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது . பாம்பு தொல்லையும் அதிகரித்து உள்ளது. இதனால் உடனே சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பெண்கள் மேயரிடம் தெரிவித்தனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது 39 வது டிவிஷன்.இங்குள்ள மாருதி நகர் மற்றும் பெரிய கிணறு தெரு ,குமரகிரி ஏரி அடிவாரம் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.

இது தவிர இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து இன்று காலை மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் 39 ஆவது டிவிஷன் முழுவதும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது மேயர் ராமச்சந்திரனிடம் பெண்கள் திரளாக வந்து மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது .

இது தவிர பாம்பு தொல்லையும் அதிகரித்துள்ளது. மாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

மழை நீர் வடிய சாக்கடை கால்வாய் உடனே அமைத்து தர வேண்டும் என பெண்கள் மேயர் ராமச்சந்திரனிடம் புகார் செய்தனர் .

இதற்கு மேயர் ராமச்சந்திரன் உங்களின் கோரிக்கை ஏற்று உடனே உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என பெண்களிடம் தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

39 ஆவது டிவிஷன் பகுதியில் எங்கெங்கு கால்வாய் சாக்கடை அமைக்க வேண்டும் .
குடிநீர் வசதி எங்கெங்கு செய்து தர வேண்டும் என்று பொதுமக்களிடம் மேயர் ராமச்சந்திரன் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது அம்மாபேட்டை மண்டல தலைவர் தனசேகரன் மற்றும் 39 வது டிவிசன் கவுன்சிலர் ஜெயந்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பெங்களூரில் இருந்து சேலம் வழியே செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் ரயில் நிலையம் மாற்றம்.


பெங்களூருவில் இருந்து சேலம் வழியே செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் ரயில் நிலையம் மாற்றப்பட்டு உள்ளது.

கே.எஸ்.ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து தர்மபுரி,
சேலம்,
ராசிபுரம்,
நாமக்கல் ,
கரூர் வழியாக நாகர்கோவிலுக்கு பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது
(வண்டி எண் 17235).


இந்த ரயில் பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் நிலையம் மாற்றப்பட்டு உள்ளது .

பெங்களூருவில் உள்ள பையப்பன அள்ளியில் அமைந்துள்ள சர்மோக்ச குண்டம் விஸ்வேஸ்வராய டெர்மினல் ரயில் நிலையத்திலிருந்து இந்த ரெயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது ,

பெங்களூரு- நாகர்கோவில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 17235) வருகிற 2ம் தேதி முதல் பெங்களூரு பையப்பன அள்ளியில் அமைந்துள்ள சர்மோக்ச குண்டம் விஸ்வேஸ்வராய டெர்மினல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

இது போல நாகர்கோவில் பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 17236)
வருகிற மூன்றாம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பெங்களூரு பையப்பன அள்ளியில் அமைந்துள்ள சர்மோக்ச குண்டம் விஸ்வேஸ்வராய டெர்மினல் ரயில் நிலையம் சென்றடையும்.

இவ்வாறு சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சேலம் அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை.

கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு வருடமும் கொலு பொம்மைகள் வைத்து அம்மனுக்கும்,கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம்.

இதுபோல இந்த ஆண்டும் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களும் கொலு பொம்மைகளை கொண்டு வந்து வைத்துள்ளனர்.


தினமும் மாலையில் எல்லைப்பிடாரி அம்மனுக்கும் ,கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.