மேட்டூர், அக். 13. மேட்டூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் அடித்துக் கொலை.

கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேட்டூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள செட்டிபட்டியை சேர்ந்தவர் மயில்சாமி (56) மேட்டூர் ஏலி கேரட்டில் உள்ள அரசு கல் குவாரியில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மகன் நந்தகுமார் (24) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது.

கடந்த 2018-ம்ஆண்டு தகராறு முற்றியது மயில்சாமியை நந்தகுமார், அவரது தந்தை மகாதேவன், தாயார் அலமேலு, சகோதரி முத்துலட்சுமி ஆகியோர் கட்டையாலும் கல்லாலும் தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த மயில்சாமி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் நந்தகுமார், மகாதேவன், அலமேலு மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று இவ்வழக்கு மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார்சரவணன் நந்தகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ 12,500அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மகா தேவனுக்கு ரூ 1,500ம், அலமேலு மற்றும் முத்துலட்சுமிக்கு தலா ரூ.2,500ம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை பெற்ற நந்தகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜசேகரன் செய்தியாளர் தலைமை செய்தி பொறுப்பாளர். 

 

 மேட்டூர் 12.10.22.

   மேட்டூர் அணை அமைந்துள்ள மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாசனத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்று மத்திய மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் அவர்களிடம்  மேட்டூர் எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தார்.  மத்திய மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர்  இன்று மேட்டூர் வந்தார்.  மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள உபரிநீர் நீரேற்று திட்ட பணிகளை பார்வையிட்டார்.

பணிகளின் நிலவரம் பயனடையும் மக்கள் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.  பின்னர் நிரம்பிய நிலையில் உள்ள மேட்டூர் அணையை பார்வையிட்டார். அணையின் வலது கரை இடது கரைஆய்வு சுரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேட்டூர் அணை நீர்வரத்து நீர் திறப்பு நீர் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.   அப்போது மத்திய இணை அமைச்சரிடம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் மேட்டூர் அணை அமைந்துள்ள மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாசனத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு டி எம் சி தண்ணீரை வழங்கினால் இப்பகுதி வளம் பெறும் என்றும் தெரிவித்தார். இது குறித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு பணித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி கோவை பெங்களூர் மட்டுமே உள்ளது சேலம் மாவட்டத்திலும் அமைத்திட வேண்டும் என்றும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றும் மேட்டூரில் இருந்து சேலம் வழியாக சென்னை எக்மோர் செல்லும் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் கூறினார்.

பெங்களூரின் கழிவுகள் காவிரியில் கலப்பதால் நீர் மலம் பாதிக்கிறது அந்த கழிவுகள் காவிரியில் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து தரங்கம்பாடி வரை காவிரியில் இரு கறைகளையும் பலப்படுத்தி கழிவுகளை கலப்பதை தடுத்து தூய்மையான காவிரியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்தார்.    

ஜினித் குமார் செய்தியாளர் , மேட்டூர் அணை. 

 

மகுடஞ்சாவடியில் காளியம்மன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு ,மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.


சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி உலகப்பனூரில் காளியம்மன் கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் பூஜையும், மாசி மாதத்தில் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 10-ம் தேதி அன்று கோயில் பூசாரி கணேசன் பூஜை செய்துவிட்டு மாலையில் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோயில் பூட்டை உடைத்து கோயிலில் இருந்த உண்டியலை எடுத்துக்கொண்டு அதில் இருந்த சுமார் ரூ. 20, 000 மதிப்புள்ள பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை காட்டில் வீசி சென்றுள்ளனர். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பெயரில் போலீசார் விரைந்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இத் திருட்டு குறித்து மகுடஞ்சாவடி பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 5-க்கு மேற்பட்ட இடங்களில் திருட்டும், 4 இடங்களில் திருட முயற்சியும் நடைபெற்றுள்ளன என்றும், இப்பகுதியில் மட்டும் தொடர் திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றோம் என்றும் , இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கூடுதலாக போலீசாரை நியமித்து திருட்டு நடைபெறாமல் இருக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

செல்வராஜ்  செய்தியாளர். இளம்பிள்ளை. 

 

ஆட்டையாம்பட்டியில் பெய்த கன மழையால் சிக்னல் கம்பம் முறிவு.


சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள
எஸ். பாலம் வளைவு பகுதியில் விபத்து நடப்பதை தவிர்க்கும் பொருட்டு சென்டர் மீடியன் மற்றும் சிக்னல் கம்பம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக சேலம் மாவட்டம் முழுவதும் இரவில் கனமழை பெய்து வந்தது. நேற்று அதிகாலையில் கன மழை பெய்ததாலும் ,சிக்னல் கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்த காரணத்தாலும் விடியற்காலையிலயே சிக்னல் கம்பம் சாலையின் நடுவில் உடைந்து விழுந்துள்ளது. இதனால் சுமார் 3 மணி நேரம் ஒரு வழி பாதையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பெயரில் பணியாளர்கள் விரைந்து வந்து உடைந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர்.

செல்வராஜ்  செய்தியாளர். இளம்பிள்ளை.

 

இடங்கணசாலை கே. கே. நகரில், பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.


சேலம், சூரமங்கலம் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக காவேரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். காவேரி மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது அளவுக்கு மீறிய சொத்து சேர்த்திருப்பதாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்திற்கு புகார் வந்தன. இதனையடுத்து காவேரி தங்கி இருக்கும் இரும்பாலை, கணபதிபாளையம் வீட்டிலும், அவரது பூர்வீக ஊரான இடங்கணசாலை, கே. கே. நகர், கஞ்சமலையூர் பகுதியில் உள்ள பண்ணை வீடு மற்றும் விசைத்தறி கூடம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் முன்னிலையில் போலீசார் நேற்று சோதனை ஈடுபட்டனர். அப்போது பண்ணை வீட்டில் வசித்து வரும் உறவினர் வண்ணக்கிளி மற்றும் விசைத்தறி கூடத்தின் மேனேஜர் உள்ளிட்டோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை செய்து வந்தனர். சுமார் நான்கு மணி நேரம் விசாரணையில் எந்த ஒரு ஆவணங்களும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், காவேரியின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை செய்ய உள்ளனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

செல்வராஜ் , செய்தியாளர் இளம்பிள்ளை.